Monday 20 November 2017

மூலக்கூற்று வாய்பாடு

மூலக்கூற்று வாய்பாடு அல்லது வேதியியல் வாய்பாடு (chemical formula) என்பது ஒரு சேர்மத்தில் உள்ள அணுக்களின் அளவுகளை விவரிக்கிறது. ஒரு சேர்மத்தின் எடையை கணிப்பதற்கும் அச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்பாடே பயன்படுகிறது. [1]
ஐதரசன் பரவொட்சைட்டின் (ஈரைதரசன் ஈரொட்சைட்டு) மூலக்கூற்று வாய்பாடு H2O2 ஆகும். இந்த வாய்பாடு மூலம் இந்த மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்களும் இரண்டு ஒட்சிசன் அணுக்களும் உள்ளன என்று தெரிகிறது.
C6H12O6 என்பது குளுக்கோசின் மூலக்கூற்று வாய்பாடு. இந்த வாய்பாடு மூலம் அணுக்களின் எண்ணிக்கை தெரிகிறதே தவிர இந்த அணுக்கள் எந்த வகையில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதில்லை. அத்துடன் பிரற்றோசினதும் குளுக்கோசினதும் மூலக்கூற்று வாய்பாடு ஒன்றேயெனினும் இவற்றின் வேதியியற் கட்டமைப்புகள் வேறுபட்டவை. எனவே, மூலக்கூற்று வாய்பாட்டினால் மூலக்கூறுகளின் வேதியியற் பிணைப்பைச் சரியான வகையில் விளக்க முடியாது. இக்குறையை அமைப்பு வாய்பாடு தீர்த்து வைக்கிறது.

அடைக்கப்பட்ட மூலக்கூறுகளின் வாய்ப்பாடு

வழமையான வாய்ப்பாடு: MC60
"@" வாய்ப்பாடு: M@C60
சில மூலக்கூறுகளும் அணுக்களும் சில வகை மூலக்கூறுகளில் அடைக்கப்பட்டு காணப்படும். அதாவது உள்ளேயுள்ள மூலக்கூறு அல்லது அணுவானது அதனைச் சூழவுள்ள மூலக்கூறுடல் வேதியல் பிணைப்பைப் பேணாமல் வெறுமனே அடைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பக்மின்ஸ்டர்ஃபுலரின் (C60) மூலக்கூற்றில் அடைக்கப்பட்டுள்ள அணுவோடு (M) அம்மூலக்கூறின் வாய்ப்பாட்டை வழமையாக MC60 என்றே எழுதப்படும். எனினும் M உம் C60 உம் வேதியியல் தொடர்பைப் பேணாமை இவ்வாய்ப்பாட்டாற் காட்டப்படவில்லை. @ குறியீடைப் பயன்படுத்துவதால் இவை இரண்டும் வேதியியற் பிணைப்பைப் பேணவில்லை என்பதைக் காண்பிக்கலாம். அதாவது பக்மின்ஸ்டர்ஃபுலரினின் மூலக்கூற்று வாய்பாட்டை M@C60 என எழுத முடியும்.

ஹில் முறை

ஹில் முறை என்பது மூலக்கூற்று வாய்ப்பாட்டை எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் கார்பன் குறியீடும் பின்னர் ஐதரசன் குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூற்று வாய்ப்பாட்டில் எளிதாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...