Friday 20 October 2017

முக்குணத் துணை மருந்து

சுக்கு, மிளகு, திப்பில் ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் 'முக்குணத்துணை மருந்து' என்பது. இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில் ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும் உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி உடலைக்காக்கும் தன்மையது. இம்மருந்து வைத்திராத சித்த மருத்துவர் கிடையாது என்று துணிந்து கூறலாம். ரசபாஷாண வகைகளை இதை துணை மருந்தாக சேர்த்துக் கொடுப்பதில் நோய் சிக்கல் அடையாமல் விரைவில் குணமாவதுடன் ரசபாஷாண நஞ்சு மருந்துகளால் வாய்வு பிடிப்பு, வேக்காடு ஆகிய கெடுதல் குணம் உண்டாகாது என்பது சித்தர்களின் வாக்கு.
அளவு
குழந்தைகளுக்கு இரு மிளகளவு வெந்நீருடன், சிறுவர்களுக்கு இருமடங்கும், பெரியோர்களுக்கு வயதுக்குத் தக்கபடி 10 முதல் 15 அரிசி எடை இம்மருந்தை பொதுவாக தருவார்கள். 'திரிகடுகம்' என்றும் இதனை சொல்வதுண்டு.

ஐந்தீ சுடர் மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகளைச் சுத்தம் செய்து சம எடை எடுத்து வெய்யிலில் உலர்த்தி இடித்து துல்லியமாக தூள் செய்து ஒரு புட்டியில் வைத்துக் கொள்க. அளவு 10 முதல் 20 அரிசி எடை தேன், நெய், வெந்நீர் ஆகிய துணைகொண்டு காலை மாலை இருவேளை பித்தநாடி மிகுந்த போது காணும் அதிஉஷ்ணம், மார்பு எரிச்சல், பக்க சூலை அனல் வாய்வு, பித்த புளியேப்பம், வயிற்றுப் புசம், பசியின்மை, வறட்சி ஆகியவைகள் ஐந்தீச்சுடர் பட்ட மாத்திரம் தீயில் பட்ட பஞ்சுபோல் பறக்கும்! இதைத் துணை மருந்தாக அமைத்து சண்ட மாருத செந்தூரம், ஆறுமுக செந்தூரம், அயம், காந்தம் முதலானவைகளுக்கு சமயோசிதம் போல் சித்த மருத்துவர்கள் கையாண்டு நீடித்த பல நோய்களைத் திறமையாக போக்கி விடுவார்கள். இம்மருந்தை 'பஞ்ச தீபாக்கினி' என்றும் கூறுவார்கள்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...